சிங்கப்பூர் நாளிதழ்களில் வெளிவந்த சிறுகதைள் தொகுப்பு
இலக்கிய வளர்ச்சி
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி
பத்திரிகைகள் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. 1935 இல் சிங்கப்பூரில் தோற்றம் கண்ட தமிழ் முரசு, தன் வாசகர்களுக்கு நடப்புச் செய்திகளை வழங்கியதோடு, மலாயா, சிங்கப்பூர் தமிழர்களின் நலன்களுக்குப் பாடுபட்டு இவ்வட்டாரத்தில் படைப்பிலக்கியம் மலரவும் துணைபுரிந்திருக்கிறது. சிங்கை நேசன், மாலை மணி, தமிழ் நேசன், தமிழ் மலர் போன்ற பல பத்திரிகைகள் அக்காலகட்டத்தில் தோன்றி படைப்பாளர்களின் ஆற்றல் வெளிப்பட பெரிதும் துணைபுரிந்தன.
தமிழ் முரசு ஆசிரியர் திரு கோ. சாரங்கபாணி அவர்கள், இங்கு வாழும் தமிழர்கள் தங்களுக்கு இடையே ஜாதி, மத பேதங்கள் பாராட்டாமல் மொழி அடிப்படையில் ஒன்றுபடுவதற்கு 1952 ம் ஆண்டு தைத்திங்களில் தமிழர் திருநாள் விழாவைத் தொடக்கிவைத்தார். அப்போது மலாயாக் கூட்டரசு, சிங்கப்பூர் காலனி முழுவதுமாக மொழி உணர்வும், இனப்பற்றும் பெருக்கெடுத்தன. அந்தப் பொற்காலப் பின்னணியில்தான் இவ்வட்டாரத்தில் சிறுகதை, கவிதை இலக்கியங்களை வளர்த்தெடுக்க தமிழ் முரசு முனைப்புடன் செயல்புரிந்தது.
சிறுகதை
சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றின் நெடுகிலும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளாக வடித்தெடுக்க நடந்த முயற்சிகளைக் காணலாம். சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் பொற்காலமாகிய ஐம்பதுகளில் துவங்கி இன்றுவரை அதிகமாக வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதையாகப் பதிவு செய்யும் கதைகள் வெளிவந்துள்ளன. அந்த சம்பவங்களை வெறும் சம்பவங்களாகப் பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதன் பின் உள்ள சமூக ஓட்டங்களையும் சிந்தித்து அந்த சிந்தனைகளை இலக்கியப் புனைவில் ஊற்றித் தந்தனர் படைப்பாளிகள்.
மலாயாச் சிறுகதைப் படைப்பாளர்களாக உஷா நாயர், வயி. சரஸ்வதிதேவி, மு. அப்துல் லத்தீப், கே. முகம்மது யூசுப், மு. பக்ருதீன், ஜி. பி. சாசரஸ், அ. கி. அறிவானந்தன், மெ. அறிவானந்தன், சி. கோன், தே. நவமணி, சி. கமலநாதன், வி. ச. முத்தையா, சி. காவேரிநாதன், சி. வடிவேல், செ. குணசேகர், என். துரைராஜ், ந. வரதராசன், மா. செ. மாயதேவன், கா. பிச்சைமுத்து, ப. சந்திரகாந்தம், ரெ. கார்த்திகேசு, மா. இராமையா, ஆர். சண்முகம், பூ. அருணாசலம், பெ. மு. இளம்வழுதி, நாரண. திருவிடச்செல்வன், முரு. சொ. நாச்சியப்பன் முதலியோரும், சிங்கப்பூர்ச் சிறுகதை எழுத்தாளர்களாக ந. பழநிவேலு, எம். கே. பக்ருதீன் சாஹிப், முகிலன், சே. வே. சண்முகம், மு. சு. குருசாமி, பாக்கியசிற்பியன், மா. செகதீசன், சிங்கை நிமலன், பி. பி. காந்தம், புதுமைதாசன், ரா. நாகையன், என். கே. நாராயணன், ஐ. உலகநாதன், அ. ரெசுவப்பா, மு. தங்கராசன், இராம. கண்ணபிரான் முதலியோரும் தமிழ் முரசின் கதைப் பண்ணையில் வளர்க்கப்பட்டு, சிறுகதையின் தொடக்ககால வரலாற்றில் உள்ளூர் எழுத்துலக அணியைப் பிரதிநிதித்தனர்.
கவிதை
சிங்கப்பூரின் தமிழ்க் கவிதை எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களாகிய ந. பழவேலு, சிங்கை முகிலன் கியோரின் படைப்புகளில் சாதிமதக் கொடுமை, கிழமணக்கொடுமை போன்ற பல சீர்திருத்த கருத்துகள் மிளிர்ந்தன. பொதுவாக அன்றைய கவிதைகளில் சாதி ஒழிப்பு, கைம்பெண் மணம், பொருந்தா மணம், மத ஊழல் எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, மதச் சீர்திருத்தம் முதலிய கருபொருள்களைக் கொண்டிருந்தன. இரண்டாம் உலகப்போரின் போது தளர்ச்சி கண்டிருந்த இலக்கிய வளர்ச்சி போர் முடிவுற்றபின் வளர்ச்சி அடைந்தது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளில் ஜப்பானியரின் கொடுங்கோல் ஆட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. 1953இல் நீலகண்ட சாஸ்திரியார் வருகையும் சிங்கப்பூரில் இருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை ஏற்படுத்த அவர் செய்த பரிந்துரையும் தமிழரிடையே கோபத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தின. அதனால் கோ. சாரங்கபாணியின் தலைமையில் ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் இயக்கத்தின் விளைவாக கா. பெருமாள், முகிலன் முதலானோர் தமிழ்பற்றூட்டும் கவிதைகள் எழுதித் தமிழர்களைத் தட்டி எழுப்பினர். 1963இல் கம்யூனிச மிரட்டல் நிகழ்ச்சிகள் இன ஒற்றுமைக்குப் பங்கம் விளைவித்தன. இக்காலகட்டத்தில் மலேசிய நாட்டுப்பற்றுப் பாடல்களை எழுத்தாளர்கள் எழுதினர். கவிஞர்கள் ஐ. உலகநாதன், முத்தமிழன், முல்லைவாணன், க. து. மு. இக்பால், கா. பெருமாள், ந. பழனிவேலு, அமலதாசன், முதலிய கவிஞர்கள் இத்தகைய பாடல்களைப் பாடினர். தமிழ் முரசில் தொடங்கப்பெற்ற வெண்பாப் போட்டியும் தமிழர் திருநாள் போட்டியும் கவிஞர்களுக்கு ஊக்கம் ஊட்டிக் கவிதை எழுதத் தூண்டின.
ஐ. உலகநாதன், முல்லைவாணன், சிங்கை முகிலன், க. து. மு. இக்பால், முருகதாசன், ஜமீலா, கா. பெருமாள், இளமாறன், தங்கராசன், பரணன், மணிவண்ணன், சித பழனிச்சாமி, வி. இக்குவனம், முத்துமாணிக்கம், பெரி. நீல பழனிவேலன், சுகுமாறன், ஏ. பி. சண்முகம், சுதர்மன், அமலதாசன், மலர் மாணிக்கம் போன்றோர் கவிதை வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றியுள்ளனர்.
அன்றைய மலாயா, சிங்கப்பூர்ப் பிரதேசங்களில் தமிழ் முரசு வளர்த்தெடுத்த தமிழ் இலக்கியத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியம் தேசியக் கல்விக் கழகத்துடன் இணைந்து 1936 ம் ஆண்டு முதல், 1960 ம் வருடம் ஈறாக, முரசில் வெளிவந்த சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றைச் சேகரித்து வெளியிட்டுள்ளது. சிறுகதைகளுக்கு கதைச் சுருக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அரிய முயற்சி, இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்குக் கவிதைகள், கதைகளின் மூலப் படிகளை நுண்படச் சுருள்களில் கண்டடைய ஒரு கைவிளக்காய்த் திகழ்கிறது. தம் ஆரம்பக் கதைப் பிரதிகளைத் தவறவிட்ட கதாசிரியர்கள், முரசுக் கதை, கவிதைகளைப் பிரசுரிக்க விரும்பும் பதிப்பாளர்கள், சிங்கப்பூர்க் கதை, கவிதைகளை மதிப்பிட விழையும் ஆய்வாளர்கள் போன்றோருக்கு இந்த விவரப்பட்டியல் நூல் உண்மையிலேயே நற்பயன்களை விளைவிக்கும் ஒரு கொடை நூலாகும்.
ஆதாரக் குறிப்புகள்:
1. திண்ணப்பன், சுப., சிவகுமாரன், ஏ. ர். ஏ. (2002). சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு: ஒரு கண்ணோட்டம். சிங்கப்பூர்: கலைகள் மன்றம், சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம்.
2. Conference on Tamil Literature In Singapore and Malaysia 7 & 8 September 2002. (2002). Singapore: Centre for the Arts, National Univeristy of Singapore.
3. ஸ்ரீலக்க்ஷ்மி, எம். எஸ். (2005). சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியமும் ழமும். சென்னை: மருதா.
4. இராம கண்ணபிரான். (1977). வீரமணி, அ. (Ed). சிங்கப்பூரில் தமிழ்ச் சிறுகதை. சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும் (பக். 23-37). சிங்கப்பூர்: சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம்.
5. சீதாராமன், த. (1996). சிங்கப்பூரில் தமிழ்ச் சிறுகதை ஆய்வு நூல். சென்னை இலயோலா தன்னாட்சிக் கல்லூரி.
Subject Guide |
Links: Profile & Guides |



Loading...
