அரிய தமிழ் நூல்கள்-ஒரு கண்ணோட்டம்
தேசிய நூலகத்தில் உள்ள அரிய தமிழ் நூல்த் தொகுப்பு பற்றிய கட்டுரை இது. 1945 ஆம் ஆண்டுக்கு முன் சிங்கப்பூரில் பதிப்பிக்கப்பட்ட வெளியீடுகளை அரிய நூல்கள் என வகைப்படுத்தியுள்ளனர். சிங்கப்பூர் அல்லது மலாயாவில் அச்சிடப்பட்ட நூல்களில் நமக்குக் கிடைத்தவை 18 நூல்கள். அவற்றில் இரண்டு, சஞ்சிகைகள், ஒரு தமிழ் வழி ஜப்பானிய மொழி கற்றல் கியவையும் அடங்கும். 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இங்கு தமிழ்ப் பத்திரிகைகள் இருந்தமைக்கு இவை தாரங்களாகும். இவற்றுள் பல திரு சி. கு. மகுதூம் சாயபுக்குச் சொந்தமான தீனோதயவேந்திரசாலையில் அச்சிடப்பட்டுள்ளன.
அவ்வாறு நமக்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் பெரும்பான்மை இஸ்லாமியக் கவிதை நூல்களாகும். இந்நூல்கள் இறைவனின் பெருமைகளையும், இறைத்தூதர்களின் பெருமைகளையும், மதகுருமார்களின் பெருமைகளையும் எடுத்துக்கூறுகின்றன. இரண்டு நூல்கள் முருகக் கடவுளைப் போற்றி எழுதப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் ஒரு நூல் மட்டுமே அக்காலச் சிங்கையைச் சற்று விவரித்து எழுதப்பட்டுள்ள கவிதை நூலாகும்.
இந்நூல்களை ராயும்போது நமக்குத் தெரிவது, சிங்கைத் தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இருந்த கவிதை கலாசாரத்தை ஒட்டியே வளர்ந்தது என்பதாகும். உரைநடை, சிறுகதைகள் பிரபலம் ஆகாத அக்காலத்தில் இங்கு வந்த நம் முன்னோர்களும் அத்தகைய வழியையே கடைபிடித்தனர். அனைத்துக் கவிதைகளும் இறைவனுக்கே அர்பணிக்கப்பட்டன.
இந்நூல்களின் சிறப்பம்சங்களில் ஒன்று, இஸ்லாமியக் கவிஞர்களுக்குப் பல இந்துமதக் கவிஞர்கள் சாற்றுக் கவிகள் புனைந்திருப்பது. குறிப்பாக யாழ்ப்பாணம் வண்ணைநகர் சி. ந. சதாசிவ பண்டிதர், சிங்கப்பூர்ச் சித்திரகவிநாவலர் சி. வெ. நாராயணசாமிநாயகர், மதுரை ஜில்லா ராம. வெ. இராமநாதச்செட்டியார் ஆகியோரின் சாற்றுக் கவிகள் பல இஸ்லாமியப் புத்தகங்களில் காணப்படுகின்றன. அவை இஸ்லாமியக் கவிஞர்களைப் பாராட்டி எழுதப்பட்டுள்ள கவிதைகளாகும். கவிஞர்களிடையே மத நல்லிணக்கமும், ஒற்றுமையும், மரியாதையும் தழைத்தோங்கி இருந்ததை இக்கவிதைகள் மூலம் உணரமுடிகிறது.
இந்நூல்களில் அக்காலத்தில் அச்சிடப்படும் முறைகளைப் பற்றியும் அறியலாம். முதல் பக்கத்தில் இயற்றியவர் பெயரை அச்சிடுமுன், அவரின் தந்தையாரின் பெயரை இட்டு, அவரின் புதல்வர் இன்னார் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும் பிழைகள் உள்ள பக்கங்களையும், அவற்றின் திருத்தங்களையும் தவறாமல் இணைத்துள்ளனர். இன்றைய வெளியீடுகளில் எத்தனைத் திருத்தங்கள் இருந்தாலும் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அத்துடன் இப்பழம் நூல்களில், வெளியிட உதவியவர்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.
1887 ஆம் ஆண்டு வெளிவந்த யாழ்பாணம் வண்ணைநகர் சி. ந. சதாசிவப்பிள்ளை அவர்கள் இயற்றிய `சிங்கை நகரந்தாதி, சித்திரகவிகள் ஆகிய இரு நூல்களும் சிங்கையின் இலக்கிய முன்னோடி நூல்களாகக்கொள்ளப்பட்டன. பின்பு சிங்கையில் வாழ்ந்து தம் சொந்த ஊரான நாகூருக்குச் சென்ற திரு ஜாபர் மொஹித்தீன் என்பவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற, 1872 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட `முனாஜாத்துத் திரட்டு' என்ற நூலே தற்போது சிங்கையில் அச்சிடப்பட்ட கப் பழைய தமிழ் நூலாகக் கொள்ளப்படுகிறது.

Loading...
